பாரத நாடு எண்ணற்ற தவப்புதல்வர்களைப் பெற்றுள்ளது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடங்கி, அருட்திரு சுவாமி சிவானந்தர், காஞ்சிப் பெரியவர்வரை எத்தனையோ அருளாளர்கள் இப்பூமியில் பிறந்து, மக்களுக்கு நல்வழிகாட்டிச் சென்றுள்ளனர். இவ்வரிசையில் தமிழகம்கொண்ட பெரும் பயனாக அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் பிறந்து, தமிழ்க் கடவுள் முருகன்மீது பல்வேறு பாடல்களைப் பாடினார். இவர், முருகனே அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் தொடங்கி, வேல் வகுப்பு, வாள் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி என்று முருகனின்மீது இயற்றிய பாடல்கள் அளவில்லாதது.
எவ்வாறு திருவாசகம் சைவத் திருமுறைகள் மனதை உருக்குமோ, வைணவத்தில் ஆழ்வார்களின் பாசுரங்கள் பக்திகொண்ட மனதைப் பரமனடி சேர்க்குமோ, சக்தி வழிபாட்டில் பல ரகசியங்கள்கொண்ட லலிதா சகஸ்ரநாமம், தேவி மகாத்மியம் உள்ளதோ, அவ்வாறே கந்தரனுபூதி முருகனின் அடியார்களை உருக்கும்; முருகனடி சேர்க்கும்; வாழும்பொழுதே இகபர சௌபாக்கியத்தைக் கொடுக்கும்.
கந்தரனுபூதி சிறப்பு
இறைவனை ஆன்ம ரூபமான ஞானம் கொண்டு தெளிவடைந்து, தானும் எங்கும் நிறையும் இறைவனும் ஒன்றே என்றும், இந்த ஆன்மாவானது இறைவனின் ஒருபகுதியே என்றும் உணர்வதே அனுபூதி எனப்படும்.
அனுபூதி என்பது சமஸ்கிருதப்பதமான ஆத்ம சாக்க்ஷாத்காரம் என்பதற்கு நேரொப்பப் பொருளாகும்.
51 செய்யுள்களும் 51 அட்சரங் களைக் குறிக்கப்பெற்று, இந்தப் பாடல் ஒரு மாத்ருகா அட்சர மாலை என்றே சொல்லவேண்டும். இதையே அருணகிரிநாதரும் சொல்லே புனையும் சுடர்வேலவனே என்று கூறுகிறார். மகாவாக்கியங்களான அஹம் பிரம்மாஸ்மி, வேறெங்கும் காணமுடியாத குமரா நம என்ற முருகப் பஞ்சாட்சரமும் அனுபூதியில் காணப்படும் சில ரகசிய மந்திரங்கள்.
காப்பு
"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கரவானை பதம் பணிவாம்.'
பொருள்: கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து உருகி, ஆறுமுகப் பெருமானின் அடிசேர்வதற்காக, அழகிய பொருள் பொதிந்த சொற்கள் கொண்டு புனைந்த பாமாலை சிறக்க, ஐந்து கரங்கள் கொண்ட கடவுளின் பதம் பணிவோம்.
எந்தவொரு படைப்புக்கும் முதலாக விநாயக வழிபாடு செய்வதே மரபு.குறிப்பாக, பக்தி இலக்கியங்களில் விநாயகரை முதலில் பாடி, அவர் காப்பைத் துணைகொண்டே மற்ற பாடல்கள் தொடரும். இம்முறை பெரும்பான்மையான பக்தி இலக்கியங்களில் கடைப் பிடிக்கப்பட்டிருக்கிறது.
அருணகிரிநாதர், முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் இரண்டிலுமே விநாயகரைப் பாடி அவரருள் வேண்டுகிறார்.
எனினும், இங்கு ஒரு மாறுதலான கண்ணோட்டம்மூலம் சில எழுதப்படாத விஷயங்களையும் சற்று காணவேண்டும். இந்த கண்ணோட்டம் லலிதாசகஸ்ர நாமத்திற்கும், கந்தரனுபூதிக்கும் உள்ள ஒற்றுமையைக் காண உதவும்.
அருணகிரிநாதரின் காப்புப் பாடலிலும், அவர் கடவுளின் ஐந்து செயல்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்றவற்றையே முதன்மைப்படுத்தி, அதையே ஐந்து கரங்களாக்கி, நேர்த்தியாக ஐந்து கரம் கொண்ட விநாயகரையும் மரபுவழி வாழ்த்தி, ஐந்தொழில் புரியும் பரப்பிரம்மமே காப்பாக இருக்கக்கடவது என்று வாழ்த்தை அமைத்துள்ளார்.
லலிதாசகஸ்ர நாமத்தில் விநாயகர் தோற்றம், லலிதையின் தோற்றத்திற்குப் பின்னேயே நடக்கும். அங்கு விநாயகரைக் காப்பாக அமைப்பது தர்க்கரீதியாகும்; ஏற்புடையதாகாது. லலிதையின் நாமங்களில் கீழ்வரும் நாமங்களில் பரப்பிரம்மத்தின் பஞ்ச தொழில்கள் குறிப்பிடப்படுகின்றன. சாக்தத்தில் சக்தியே பரப்பிரம்மம் என்ற தத்துவத்தில் இவ்வாறான நாமங்களில் பராசக்தியின் புகழ் பேசப்படுகிறது. இனி, கந்தரனுபூதியின் காப்புச் செய்யுளுக்கும், லலிதையின் நாமங்களுக்குமுள்ள ஒற்றுமையைக் காண்போம்.
"ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ கோவிந்தரூபிணீ, ஸம்ஹாரிணீ ருத்ரரூபா, திரோதான கரீச்வரீ ,ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்சக்ருத்ய பராயணா'
பஞ்சாக்கரவானை என்று காப்புச் செய்யுளில் சொல்லும் ஒரு சொல்லுக்கு சகஸ்ரநாமத்தில் ஐந்து பொருள்கள் பொதிந் துள்ளன. அவை:
படைத்தல்- பிரம்மாவாக இருந்து உலகத்தைப் படைத்தல். இதை ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா என்ற நாமத்தில்அறியலாம்.
காத்தல்- விஷ்ணுவாக இருந்து உலகத் தைக் காத்தல். இந்த செயலின் பொருளாக கோப்த்ரீ கோவிந்தரூபிணீ என்ற நாமத்தில் பராசக்தியின் செயல் புரிகிறது.
அழித்தல்- பிரளய காலத்தில் ருத்திரனாக இருந்து உலகை தம்முள் வாங்கிக்கொள்ளுதல். இதன்பொருளாக உள்ள நாமம் ஸம்ஹாரிணீ ருத்ரரூபா.
மறைத்தல்- உலகை மாயை கொண்டு, உண்மை நிலையிலிருந்து ஜீவர்களை அவரவர் கர்மவினைக்கேற்ப மறைத்தல். இதன் பொருளே திரோதானகரீச்வரீ.
அருளல்- ஒவ்வோர் ஆன்மாவும் பக்குவ நிலையை அவளருளாலே எய்தவுடன், தாமே சத்தியநிலை உணர்த்தி, அந்த ஆன்மாவை குருவாகி ஆட்கொண்டு தம்முள் சேர்த்து, சதாசிவனாக அமர்ந்து பிறவாப் பெருநிலை அளிப்பதே ஸதாசிவா அனுக்ரஹதா.
இந்த ஐந்து தொழில்களும் பராசக்தி செய்வதால், அவள் பஞ்சக்ருத்ய பராயணா என்று போற்றப்படுகிறாள். ஐந்து கரம் கொண்ட விநாயகப் பெருமானும் இவ்வைந்து தொழில்கள் புரிவதால் அவரும் பரப்பிரம்ம ரூபமாகிறார்.
கந்தரனுபூதியின் பாட்டுடைத்தலைவ னான முருகப் பெருமானும் இவ்வைந்து தொழில்களும் புரிந்த சான்றுகள் புராணங் களில் காணப்படுகின்றன. கம்பரைப்போல் தாம் பாடும் தலைவன் பரப்பிரம்மமே என்று சொல்லாமல் சொல்வதே காப்புச் செய்யுள். காப்புச் செய்யுள் விநாயகருக்காக மட்டும்தான் என்றால், அனுபூதியின் முதற் பாடலில் கணேசரை மறுபடியும் பாட அவசிய மில்லாமற் போகிறது. காப்புச் செய்யுளில் அருண கிரிநாதர் விநாயகர், முருகனை மட்டும் பாட வில்லை; தாம் பாடும் பொருளே பிரம்மம்; அந்த பிரம்மத் திற்கு இந்த ரூபங்கள் பல என்று சொல்லாமல் சொல்கிறார். இதற்கு சான்றாக லலிதையின் நாமங்கள் வாயிலாகவும் நாம் இதை மேலும் உணரமுடிகிறது.
இந்த ஐந்து தொழில் புரிவோரையும் பரப்பிரம்மமே இயக்குகிறது என்ற பொருளி லேயே பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ் மஸ்வரூபிணீ என்ற லலிதையின் நாமங்கள் விளக்குகின்றன. பரப்பிரம்மம் இல்லையேல் இந்த ஐந்தொழில் புரிவோரும் ஜீவனற்ற உடல் போன்றோர்தான் என்று தெளிவாகப் புரிகிறது. அவ்வாறே கந்தர் அனுபூதியின் தலைவனான முருகப்பெருமான் பிரம்மமாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறார் என்ற மிகவும் அர்த்தம் பொதிந்த சொல்லாக பஞ்சகரண் என்ற சொல்லில் காப்புப் பாடலிலேயே அருணகிரிநாதர் உணர்த்துகிறார்.